கோவில் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்பு


கோவில் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 March 2018 4:00 AM IST (Updated: 13 March 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் ஓசூரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காளைவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் உள்ள ஓசூரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.

காளைகள் ஓடும் தெருவின் இரு புறங்களிலும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தெருக்களில் மணல் கொட்டப்பட்டிருந்தது. காளைகளை விரட்டுவதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டிருந்தனர். போட்டியில் பங்கேற்க கொண்டு வரப்பட்டிருந்த காளைகளை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக விடப்பட்டன. தெருவில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகப்படுத்தி விரட்டினர். ஒவ்வொரு காளையும் இரண்டு சுற்றுகள் விரட்டப்பட்டன. காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தூரத்தை கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரமும் இவை உள்பட மொத்தம் 42 பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைவிடும் திருவிழாவை விலங்குகள் நலவாரிய அமைப்பினர் நேரில் கண்காணித்தனர். இதற்காக விலங்குகள் நல வாரிய கன்வீனர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காளைவிடும் திருவிழா தொடங்குவதற்கு முன்பு காளைகளுக்கு எவ்வாறு மருத்துவபரிசோதனை செய்யப்படுகிறது. என்ன வகையான உணவு வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்த அவர்கள் காளைகள் ஓடும்பாதை குறித்தும் ஆய்வு செய்து காளைகள் விரட்டப்பட்டதையும் கண்காணித்தனர். 

Next Story