காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆம்புலன்ஸ் ஊழியர், ராணுவ வீரரின் அசாத்திய முயற்சி, அமைச்சர்கள், அதிகாரிகள் பாராட்டு


காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆம்புலன்ஸ் ஊழியர், ராணுவ வீரரின் அசாத்திய முயற்சி, அமைச்சர்கள், அதிகாரிகள் பாராட்டு
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆம்புலன்ஸ் ஊழியர், ராணுவ வீரரின் அசாத்திய முயற்சிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி,

தேனி மாவட்டம், போடி குரங்கணியில் காட்டுத்தீ பற்றி எரிந்ததில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 14 மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணிக்கு ஆம்புலன்ஸ் ஊழியர் ஜெகதீசன், விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த குரங்கணியை சேர்ந்த ராணுவ வீரர் பாக்கியராஜ் ஆகியோரின் அசாத்திய முயற்சி பெரிதும் உதவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த போது, சம்பவ இடத்துக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ஜெகதீசன் தனது செல்போனில் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பிய வீடியோக்கள் தான் இந்த விபத்தின் கோரத்தை உணர வைத்தது.

அதன்பிறகே இந்த சம்பவத்தில் மீட்பு பணி தொடங்கியது. ராணுவ வீரர் பாக்கியராஜ், சம்பவ இடத்தில் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உயிரை பணயம் வைத்து செயல்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரும், கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். இவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டு குவிந்து வருகிறது.

மீட்பு பணி குறித்து ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘எனது ஊர், தேனி அருகே உள்ள டொம்புச்சேரி. குரங்கணி ஒத்தமரம் பகுதியில் தீ விபத்தில் பலர் சிக்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், ஆம்புலன்சில் நான் வந்தேன். குரங்கணிக்கு வந்தபோது ஒத்தமரம் பகுதி எது என்று தெரியவில்லை. இதற்காக அங்கிருந்த மக்களின் உதவியை நாடினேன். அப்போது அங்கு வந்த ராணுவ வீரரான பாக்கியராஜ் மற்றும் சிலர் எனக்கு உதவுவதாக கூறினர்.

நாங்கள் மலைப் பகுதிக்கு சென்றோம். அங்கே பயங்கரமாக தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அங்கு சிலரின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. பாக்கியராஜ் படுவேகமாக செயல்பட்டு தீயை அணைத்தார். உடன் வந்தவர்களும் உதவி செய்தனர். எப்படியாவது அவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்று முயற்சித்தோம். ஆனால், நாங்கள் அருகில் சென்று பார்க்கும்போதே சிலர் மூச்சு, பேச்சின்றி இருந்தனர். வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத நிகழ்வு இது’ என்றார்.

ராணுவ வீரரான பாக்கியராஜ் கூறுகையில், ‘சில நாட்களுக்கு முன்பு தான் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தேன். தீ விபத்தில் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததால், மீட்பு குழு வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்று, ஆம்புலன்ஸ் ஊழியருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தேன். எனக்கு இந்த வனப்பகுதியில் பாதை தெரியும் என்றாலும், தீயை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. தீ வேகமாக பரவியது. சிலர் பலத்த காயங்களுடன் அசைய கூட முடியாமல், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். முடிந்தவரை அனைவரையும் காப்பாற்ற முயற்சித்தோம்’ என்றார்.

குரங்கணி, முதுவாக்குடி, கொழுக்குமலை மற்றும் கொட்டக்குடி ஆகிய கிராமங் களுக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ரவீந்திரநாத் நேற்று நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கு உதவிபுரிந்தமைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நன்றி கூறினார். அப்போது இனி வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டு கொண்டார். அவருடன் முன்னாள் எம்.பி.சையதுகான், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் முருக்கோடை ராமர், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம் மற்றும் பலர் இருந்தனர். 

Next Story