விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் 7 பேர் வாழ்வு பெற்றனர்


விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் 7 பேர் வாழ்வு பெற்றனர்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேர் வாழ்வு பெற்றனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்தவர் குருநாதன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜானகி(வயது 36). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(11), நந்தினி(10), பவானி(9), நாகம்மாள்(7) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இலுப்பூரில் இருந்து மலைக்குடிப்பட்டிக்கு சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜானகி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு இலுப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் வழங்கினால் அதன்மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்று ஜானகியின் கணவரிடம் டாக்டர்கள் எடுத்து கூறினர். இதையடுத்து அவர் தனது மனைவி ஜானகியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புக்கொண்டார்.

நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஜானகியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இதயம் பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைத்து உடனடியாக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விமானநிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து காலை 9 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கு இதயம் பொருத்தப்படுகிறது. இதேபோல் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும், கல்லீரலானது அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே மருத்துவமனைக்கும், கண்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. ஜானகியின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் வாழ்வு பெற்று உள்ளனர்.

இதுபற்றி ஜானகியின் கணவர் குருநாதன் கூறுகையில், “என் மனைவியின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதன் மூலம் 7 பேர் வாழ்வு பெற உள்ளனர். அந்த 7 பேரின் மூலம் என் மனைவி மீண்டும் உயிர் வாழ்வதை நினைத்து பெருமையடைகிறேன்“ என்றார். 

Next Story