தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு,
தேனி மாவட்டம் போடி குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கடம்பூர் கம்பத்ராயன் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் நேற்று முன்தினம் அணைத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை சார்பில் டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்து பிரசாரம் நடைபெற்றது. சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரசாரத்தில் கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று வன்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்கள். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில், தீத்தடுப்பு குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தியூர் வன அதிகாரி ராமராஜ் தலைமை தாங்கி, பயிற்சி அளித்தார். இதில் வனப்பகுதியில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவது குறித்தும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனஅதிகாரிகள் முருகேசன் (சென்னம்பட்டி), பாலகிருஷ்ணன் (பர்கூர்) மற்றும் ஏராளமான வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தாளவாடி தாலுகா அலுவலகத்தில், மலைப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாசில்தார் கதிர்வேல் தலைமை தாங்கினர். கூட்டத்தில், தற்போது கோடை காலம் என்பதால் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். அதை தடுப்பது குறித்தும், மலைக்கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு மலைக்கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தாளவாடி வனச்சரகர் சிவக்குமார், தலமலை வனச்சரகர் பழனிச்சாமி, ஆசனூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாலப்படுக்கை கிராமத்தில் நேற்று கலை நிகழ்ச்சி மூலம் மலைப்பகுதியில் தீ பிடித்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story