திருவண்ணாமலையில் முதியவரின் மொபட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் முதியவரின் மொபட்டில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பே கோபுரத் தெருவை சேர்ந்தவர் நாக ராஜன் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு விஜயகுமார் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
நாகராஜன், திருவண்ணாமலையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை அடைப்பதற்காக ஒரு பையில் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு அதனை தன்னுடைய மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு நேற்று முன்தினம் வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் மொபட்டின் சாவியை அதிலிருந்து எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்ட மர்ம நபர்கள் மொபட்டின் சாவியை எடுத்து வண்டியின் சீட்டை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிக் கொண்டு சென்று உள்ளனர்.
டீக்கடைக்கு சென்று விட்டு நாகராஜன் மொபட்டின் அருகில் வந்து பார்த்த போது, சீட்டு திறக்கப்பட்டு பணப்பை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story