எஸ்.புதூர் பகுதியில் மிளகாய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


எஸ்.புதூர் பகுதியில் மிளகாய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 March 2018 3:15 AM IST (Updated: 14 March 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புழுதிப்பட்டி, எஸ்.புதூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் அதிக அளவு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிளகாய் பயிரானது இப்பகுதியில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாகுபடி செய்யப்படும். பின்னர் ஒரு மாதத்தில் அவை வளர்ந்து காய் காய்க்க தொடங்கிவிடும். அதன்படி இந்த ஆண்டு எஸ்.புதூர் ஒன்றியத்தில் ஏறக்குறைய 250 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் பயிரிடப்பட்டு இந்த மிளகாய் பயிர்கள் தை மாத இறுதியில் காய்கள் காய்த்து பறிப்பதற்கு ஏற்றவாறு தயாரானது.

இதனையடுத்து விவசாயிகள் அவற்றை பறித்து விற்பனை செய்தனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் மிளகாய் பயிர்களையே சாகுபடி செய்தனர். இதனால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து, போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் எஸ்.புதூர் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சாகுபடி செய்த செலவுக்கு கூட வருமானம் வருமா என்பது கேள்விக்குறியே என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- எஸ்.புதூர் பகுதியில் மிளகாய் பச்சையிலையே புடுங்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. மிளகாய் வத்தலுக்கு விவசாயிகள் விடுவது கிடையாது. ஒரு ஏக்கருக்கு தோராயமாக ரூ.30 ஆயிரம் சாகுபடி செலவு ஏற்படுகிறது. ஒரு ஏக்கரில் 5 முதல் 6 டன் மிளகாய் விளைச்சல் கிடைக் கும். இங்கிருந்து விற்பனைக்கு தயாரான மிளகாய்கள் சென் னை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்யும்போது வரத்து அதிகரிப்பால் விலை மிக குறைவாக ஏலம் விடப்பட்டு ஏற்றுமதி ஆகின்றது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை கிடைக்கவில்லை. பயிர் செலவு, களை பயிர் அகற்றுதல், மிளகாய் பறிக்க கூலி, உரம், மருந்து, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, கமிஷன், வண்டி வாடகை என இவை அனைத்தும் போக சிறு விவசாயிகள் தங்களது கை காசுகளை செலவழித்து கூலி கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story