சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ராவனேஸ்வரர் நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி அய்த்தம்மாள். இவர்களுக்கு முருகேசன், சண்முகம் என்ற மகன்களும், நதியா (வயது 27) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. முருகேசன், சண்முகம் ஆகியோருக்கு பிரித்து கொடுத்த வீட்டில் அய்த்தம்மாள் வசித்து வருகிறார். இவர்களுக்கும், அய்த்தம்மாளின் உறவினர்கள் சிலருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுடன் நதியா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். நதியாவுக்கு ஜமுனா (7), ஜனனி (5), இனிசா(3), 7 மாதமான ரித்தீஸ் என 4 குழந்தைகள் உள்ளன. நேற்று காலை வீட்டின் அருகே உள்ள நிலத்தை சுற்றி தகரத்தை கொண்டு அய்த்தம்மாள் வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அவரின் உறவினர்கள் 4 பேர் அங்கு வந்து அய்த்தம்மாள் அமைத்த வேலியை அகற்ற முயன்றனர்.
இதைத்தொடர்ந்து வீட்டினுள் இருந்த நதியா அவர்களிடம் ஏன்? இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டார். இதனால் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து அய்த்தம்மாள் மற்றும் நதியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அய்த்தம்மாளின் சட்டை கிழிந்தது. இதையடுத்து அய்த்தம்மாள் மற்றும் நதியா, அவரின் 4 குழந்தைகளுடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நதியா தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்த பாட்டிலை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதைத்தொடர்ந்து நதியாவிடம் துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story