உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 14 March 2018 5:25 AM IST (Updated: 14 March 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. ஆனால் விவசாயம் செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டவர்களுக்கும், விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்றவர்களுக்கும் தற்போது பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர், அய்யனேரி கூட்டுறவு சங்க செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது அரசு அறிவித்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை திரும்ப பெற்று, முறையாக ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், வைரவன், கிருஷ்ணசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒற்றைக்காலில் நின்றவாறு கோஷங்களை எழுப்பி, நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story