வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2 கோடியில் பளுதூக்கும் பயிற்சி மையம்


வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2 கோடியில் பளுதூக்கும் பயிற்சி மையம்
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பளுதூக்கும் பயிற்சி மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் பளுதூக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் முதன்மை நிலை பளுதூக்கும் பயிற்சி மையம் கட்டப்படும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி பளுதூக்கும் பயிற்சி மையம் கட்டுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், பளுதூக்கும் பயிற்சி மைய கட்டிட திறப்பு விழா நடந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பளுதூக்கும் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். வேலூர் சத்துவாச்சாரி பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் துணை பொது மேலாளர் ராஜ மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், தாசில்தார் பாலாஜி, பளுதூக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலேயே முதன்மைநிலை பளுதூக்கும் பயிற்சி மையம் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தான் உள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தலாம். 3 தளங்களை கொண்ட இந்த மையத்தில் அதிநவீன பயிற்சி உபகரணங்கள் உள்ளன.

குளிர்சாதன வசதியுடன் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தலைசிறந்த 25 வீரர் மற்றும் 25 வீராங்கனைகள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு முதன்மைநிலை மையத்தில் தங்கி முழுமையான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி பெற முடியும். பல்வேறு உள்கட்டமைப்பு வசதியுடன் இந்த பளுதூக்கும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதால் வீரர், வீராங்கனைகள் தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க முடியும் என்று விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story