வாலாஜாவில் ரூ.1½ லட்சம் எரிசாராயத்துடன் மினிவேன் சிக்கியது
வாலாஜா அருகே கலால்துறை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்துடன் வந்த மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா,
வாலாஜா கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி பகுதியில் உள்ள உபயோகிப்பாளர் கட்டண வசூல் மையத்தின் (சுங்கச்சாவடி)அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மினிவேன் ஒன்று வந்தது.
அதனை போலீசார் மடக்கி நிறுத்தினர். பின்னர் மினிவேனில் சோதனையிட்டபோது அதில் 25 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் மினிவேனை ஓட்டி வந்த டிரைவரான கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (வயது 47) என்பவரை கைது செய்து, கேன்களில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 875 லிட்டர் எரிசாராயத்தையும், மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள எரிசாராயம், மினிவேன் ஆகியவற்றை கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் பார்வையிட்டார். எரிசாராயம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து வாலாஜா கலால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story