பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:15 AM IST (Updated: 15 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுறவு தேர்தலில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, பால் வளத்துறை உள்பட 240 சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனு பெறுதல், அதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த 360 அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து சங்கங்களுக்கும் முறையாக உறுப்பினர் பட்டியலை தயாரித்து, அதனடிப்படையில் தகுதியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். வாக்காளர் பட்டியல் மீது, உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புகளை தெரிவிப்பதை தொடர்ந்து, இவற்றை பரிசீலித்து வாக்காளர் பட்டியல் அலுவலர் இறுதியான வாக்காளர் பட்டியலை சங்கத்தில் வெளியிடுவார்.

இதனைத்தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் பணி தொடங்கி போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தப்படும். எனவே இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்து அலுவலர்களும், தேர்தல் தொடர்பாக தங்களுக்குள்ள சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலாளருமான அந்தோணிசாமி ஜான்பீட்டர் பேசியதாவது:-

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் தேர்தல் குறித்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்படும். அனைவரும் இந்த கையேட்டில் உள்ள விதிகளை முழுமையாகப்படித்து தெளிவுபெற வேண்டும். வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வேட்புமனு பெறுதல், போட்டியிருப்பின் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவித்தல் என கூட்டுறவு சங்கத்தேர்தலின் அனைத்து நிகழ்வுகள் குறித்ததுமான தெளிவு உங்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்று கூறிய செயலாளர், முக்கிய விதிகள் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுதர்சன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி, துணை பதிவாளர் பாண்டிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story