திருச்சி தில்லைநகரில் துணிகர சம்பவம்: பழக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு


திருச்சி தில்லைநகரில் துணிகர சம்பவம்: பழக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

தில்லைநகரில் பழக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை வேறு பக்கம் திருப்பி வைத்து கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர்.

திருச்சி,

திருச்சி தென்னூர் ராம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா(வயது 39). தென்னூர் ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர்கள் ஹக்கீம், சாதிக். இவர்கள் 3 பேரும் தில்லை நகர் அருகே உள்ள உறையூர் சாலை ரோட்டில் வாடகை கட்டிடம் ஒன்றில் பழக்கடை நடத்தி வருகின்றனர். பாபு என்கிற பக்ருதீன் என்பவர் கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு பக்ருதீன் மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.

நேற்று காலை பக்ருதீன், பழக்கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பழங்கள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு கல்லாவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் 5 கேமராக்களை வேறு பக்கம் திருப்பி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கடையின் உரிமையாளர்களில் ஒருவரான முஸ்தபாவுக்கும், தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும் பக்ருதீன் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் உரிமையாளர் முஸ்தபா பழக்கடைக்கு விரைந்து வந்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி தலைமையிலான போலீசார் பழக்கடைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் கடையின் பின் வழியாக ஏறி தகரத்தினாலான மேற்கூரையை உடைத்து, சீலிங்கையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தங்களது உருவம் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் கேமராக்களை வேறு பக்கம் திருப்பி வைத்து விட்டு கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story