குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அடுத்த குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் படித்து வரும் மாணவ-மாணவிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தங்களது துறையில் பணியாற்றும் 2 கவுரவ விரிவுரையாளர்கள், ஒரு பேராசிரியர் ஆகியோர் மாணவர்களிடையே ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாகவும், தேர்வில் சீரான முறையில் விடைதாளை மதிப்பீடு செய்யவில்லை என்பன உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் மாணவிகளிடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. மாணவர்களின் குற்றசாட்டினை கல்லூரி நிர்வாகம் திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக துணை வேந்தர், பதிவாளரிடம் எடுத்து கூறியது. அதன்பேரில் பல்கலைக் கழகத்தில் இருந்து குழு ஒன்று வந்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென குரும்பலூர் கல்லூரியின் ஆங்கில துறைத்தலைவர் மீனா, பணியிடமாற்றமாக வேப்பூர் அரசு மகளிர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதனையறிந்த ஆங்கிலத்துறை மாணவ, மாணவிகள் தாங்கள் புகார் தெரிவித்த நபர்கள் மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என தெரிவிக்காததை கண்டித்தும், அவர்களை பணியிடமாற்றம் செய்யக்கோரியும் நேற்று கல்லூரி நுழைவு வாயில் அருகே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வருகிறார். தவறு செய்தவர்கள் மீது துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களிடத்தில் அவர் தெரிவித்தார். இதன் பேரில் மாணவர்கள் போராட்டம் குறித்து பெரம்பலூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story