குரங்கணி தீ விபத்து எதிரொலி: ரெங்கமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்


குரங்கணி தீ விபத்து எதிரொலி: ரெங்கமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி தீ விபத்து சம்பவம் எதிரொலியாக ரெங்கமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பகலில் மட்டும் அனுமதி அளித்தும், சூடம், பத்தி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சி மற்றும் சுற்றுலா செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கடவூர் மற்றும் அரவக்குறிச்சி அருகே உள்ள ரெங்கமலை வனப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட வன அலுவலர் பாபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

குரங்கணி தீ விபத்து சம்பவத்திற்கு பின்பு வனப்பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரெங்கமலையில் உள்ள மல்லீஸ்வரர் கோவில், முனியப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் செல்வது உண்டு. கோவிலுக்கு முன்பு இரவு நேரம் கூட பக்தர்கள் சென்று வந்தனர். தற்போது குரங்கணி சம்பவத்தினால் பகல் நேரம் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே மலையின் மேல் உள்ள கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கிவிட வேண்டும்.

சூடம், பத்தி உள்பட எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை மலையின் மேலே கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் சூடம், பத்தி ஏற்றி வழிபாடு நடத்தி கொள்ளலாம். ரெங்கமலையை சுற்றிப்பார்க்க மற்றும் கோவிலுக்கு செல்பவர்களின் விவரம் மலை அடிவாரத்தில் சேகரிக்கப்படுகிறது. மலைஅடிவாரத்தில் வனக்காவலர் ஒருவர் பணியில் இருந்து பெயர், முகவரி, செல்போன் உள்ளிட்டவற்றை சேகரிப்பார். இதேபோல மலையேற்ற பயிற்சிக்கு செல்வோர் முன் பதிவு செய்து விட்டு தான் செல்ல வேண்டும். குழுவாக செல்பவர்களுக்கு உதவியாக வனக்காவலர் ஒருவர் உடன் செல்வார்.

கடவூர் மலைப்பகுதியில் புவியியல் மாணவ-மாணவிகள் ஆய்வுக்காக அவ்வப்போது செல்வது உண்டு. அவர்கள் முறைப்படி அனுமதி பெற்றுதான் செல்வார்கள். ரெங்கமலை, கடவூர் வனப்பகுதியை ஒட்டி வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலையோரம் வசிப்பவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் காடுகளை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் வனத்துறையினருடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காட்டில் தீயை ஏற்படுத்துவதோ அல்லது தீயை ஏற்படுத்தும் பொருட்களையோ எடுத்து செல்ல கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினரின் உத்தரவுகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மலைப்பகுதியில் புற்கள், புதர்செடிகள், மரங்கள் காய்ந்து இருப்பதால் காட்டை ஒட்டி செல்லும் பாதைகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும.

இவ்வாறு அவர் கூறினார்.

வனத்துறையினரின் உத்தரவு தொடர்பாக ரெங்கமலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். 

Next Story