நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 15 March 2018 3:00 AM IST (Updated: 15 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

பலத்த மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குமரி அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

பள்ளி, கல்லூரிகளில் அறிவிப்பு பலகைகளில் விடுமுறை என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சந்தோஷமாக தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் வழக்கம் போல் சென்று தேர்வு எழுதினர். பெரும்பாலான பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு சென்று பொதுத்தேர்வு எழுதினார் கள். பின்னர் தண்ணீரில் நடந்தபடியே தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தனர். சின்னக்கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் முட்டளவு தண்ணீரில் நடந்து வெளியே வந்தனர்.

நெல்லை

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலை 7 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இருப்பினும், பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடந்தன.

Next Story