கடலூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை


கடலூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 15 March 2018 3:45 AM IST (Updated: 15 March 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவருடைய மனைவி திலகவதி(வயது 50). இவர் எஸ்.புதூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

செங்கல்பட்டில் உள்ள தனியார் மதுபான ஆலையில் ஞானபிரகாசம் வேலை செய்து வருவதால், அங்கேயே தங்கி உள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்று வருகிறார். இதனால் திலகவதி மட்டும் வீட்டில் தனியாக தங்கியுள்ளார். இவர் பள்ளிக்கு செல்வதால் தினமும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு திலகவதி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்றார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சமாகும்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் திலகவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story