போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவன்-மனைவி விஷம் குடித்தனர்


போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவன்-மனைவி விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆத்தூர் கோர்ட்டு வளாகத்தில் கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கல்லுஒட்டர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சின்னம்மாள். இவர்களுடைய மகன் வெங்கடேசன்(வயது 23).

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் தாலுகா உலகநல்லூர் கிராமத்தை சேர்ந்த மீனாவுக்கும்(19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து வெங்கடேசனும், அவருடைய மனைவி மீனாவும், பெங்களூருவில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வெங்கடேசன் மீது ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கெங்கவல்லியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயியின் வீட்டில் அவருடைய மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 17 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கடந்த மாதம் திருட்டு போனது.

இது குறித்து கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பதிவான கைரேகையும், வெங்கடேசனின் கைரேகையும் ஒத்துபோனதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை விசாரணைக்காக போலீசார் அழைக்க முடிவு செய்தனர்.

இது தொடர்பாக அம்மம்பாளையத்தில் உள்ள அவருடைய பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகன் மற்றும் மருமகள் பெங்களூருவில் வசித்து வருவதாக கூறி உள்ளனர். ஆனால் வெங்கடேசன் உடனடியாக விசாரணைக்கு வராவிட்டால் உங்களை கைது செய்து விடுவோம் என்று சின்னம்மாளிடம் போலீசார் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும், வெங்கடேசனும், மீனாவும் ஆத்தூர் அம்மம்பாளையத்திற்கு நேற்று மதியம் வந்தனர். ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்கு அவர்கள் வந்தனர். அங்கு அவர்கள் தாங்கள் கையில் கொண்டு வந்த விஷத்தை (பூச்சிக்கொல்லி மருந்து) குடித்து விட்டு மயங்கி விழுந்தனர்.

உடனே அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வெங்கடேசனிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கடந்த 3 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வருவதாகவும், அந்த திருட்டுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணைக்கு பயந்து ஆத்தூர் கோர்ட்டு வளாகத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story