வேலூர் கல்வி மாவட்டத்தில் 51,942 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் அதிகாரிகள் தகவல்
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 25 பேர் உள்பட 51 ஆயிரத்து 942 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
வேலூர்,
தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி நிறைவடைகிறது. தேர்வுக்கான பணிகளில் பள்ளி கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 928 மாணவர்களும், 12 ஆயிரத்து 949 மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 10 மாணவர்கள், 13 ஆயிரத்து 55 மாணவிகளும் என வேலூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 942 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 2 கல்வி மாவட்டங்களிலும் 219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் என 2 ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக பணியாற்றுவார்கள்.
தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 400 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 ஆயிரத்து 500 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தேர்வு மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் அனைத்தும் முக்கியமான இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணிநேரமும் பணியில் இருப்பார்கள். அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 54 வழித்தடங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. நாளை, தமிழ் பாடத்துக்கான தேர்வு நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 51 ஆயிரத்து 942 மாணவர்களில் 25 பேர் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள். அவர்களை குழந்தை தொழிலாளர் நல அதிகாரிகள் மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். இவ்வாறாக பள்ளியில் படித்த மாணவர்கள் இந்தாண்டு நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 25 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 21 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்ந்து படித்த மாணவர்களில் 43 பேர் தற்போது கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story