சேலத்தில் பட்டப்பகலில் துணிகரம்: கூட்டுறவு பயிற்சி நிறுவன துணை முதல்வர் வீட்டில் 65 பவுன் நகைகொள்ளை


சேலத்தில் பட்டப்பகலில் துணிகரம்: கூட்டுறவு பயிற்சி நிறுவன துணை முதல்வர் வீட்டில் 65 பவுன் நகைகொள்ளை
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கூட்டுறவு பயிற்சி நிறுவன துணை முதல்வர் வீட்டில் பட்டப்பகலில் 65 பவுன் நகை கொள்ளை போனது. பின்புற சுவர் ஏறி குதித்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி(வயது56). இவர் சேலம் அம்மாபேட்டையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி(51). இவர், அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே சீனிவாசா என்ற பெயரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இந்த தம்பதிக்கு என்ஜினீயரிங் முடித்த 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பாலசுப்பிரமணியன் சென்னையில் பணியாற்றி வருகிறார். 2-வது மகன் விஜய், சிவில் என்ஜினீயரிங் முடித்து விட்டு சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தினமும் காலை 9.30 மணிக்கு கருணாநிதி அம்மாபேட்டையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்துக்கு பணிக்கு சென்று விடுவதுண்டு. மகன் விஜய் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்று விடுவார். செல்வி, அனைவரும் புறப்பட்டு சென்ற பின்னர் வீட்டின் கதவு, வெளிப்புற கேட் ஆகியவற்றை பூட்டி விட்டு மெடிக்கல் ஸ்டோருக்கு செல்வார்.நேற்று வழக்கம்போல காலை மெடிக்கல் ஸ்டோர் சென்ற செல்வி, பிற்பகல் 2 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் மெயின் மரக்கதவின் லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 65 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இந்த பகுதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் மோகன், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கருணாநிதி வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீஸ் துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து ராஜகணபதி தெரு வரை சென்று காலி மனைப்பகுதியில் நின்று கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. யாரையும் உள்ளே விடாமல் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது 2 அல்லது 3 பேரின் கைரேகைகள் அதில் சிக்கியது. எனவே, வீடு புகுந்து கொள்ளையடித்தவர்கள் 2 அல்லது 3 பேராக இருக்கக்கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளையர்கள் கருணாநிதி வேலைக்கு செல்வதையும், அவரது மனைவி செல்வி மெடிக்கல் ஸ்டோர் சென்று விட்டு பிற்பகல் 2 மணிக்கு வீடு திரும்பி வருவதையும் வெகுநாட்களாக நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் பின்புறத்தில் சைக்கிள் செல்லும் அளவில் பாதை உள்ளது. அங்கு பின்புறத்தில் 2 அடி அகலத்தில் வாசல் ஒன்றை கருணாநிதி வைத்துள்ளார். கொள்ளையர்கள் பகலில் அந்த வாசலின் கேட் வழியாக சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து பக்கவாட்டு கதவை ஆக்சா பிளேடு வைத்து அறுத்தும், வீட்டின் மெயின் மரக்கதவின் பூட்டை நெம்பியும் கைவரிசை காட்டியுள்ளனர்.

வீட்டின் உள்ளே அனைத்து கதவுகள், பீரோவும் பூட்டப்படாமல் இருந்ததால் கொள்ளையர்கள் அதில் இருந்த 65 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி உள்ளனர். தற்போது போலீசார் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் உள்ள பதிவை எடுத்தும் கொள்ளையர்கள் அடையாளம் தெரிகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.13 லட்சம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவன துணை முதல்வர் கருணாநிதி, சேலம் மாநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே.செல்வராஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story