தாசில்தார் அலுவலகத்தில் வி‌ஷம் குடித்து விட்டு தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு


தாசில்தார் அலுவலகத்தில் வி‌ஷம் குடித்து விட்டு தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில், விவசாயி ஒருவர் வி‌ஷம் குடித்து விட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் குருநாதன்(வயது 68). விவசாயியான இவர் வேறு ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் வயலில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வயலின் உரிமையாளர், வயலை அளந்து கொடுக்கும்படி கும்பகோணம் தாசில்தார் வெங்கடாசலத்திடம் மனு அளித்தார். இதையடுத்து தாசில்தார் வயலை அளவு எடுக்க உத்தரவிட்டார்.


அதன்படி நில அளவையர்கள் நேற்று வயலை அளவு எடுக்கும் பணியில் ஈடுபட இருந்தனர். இதை அறிந்த குருநாதன் நேற்று கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது வயல் தொடர்பான வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால் வயலை அளக்க கூடாது என கூறினார்.

பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்த அவர், தான் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்து விட்டு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தனக்கு நீதி வேண்டும் என கோ‌ஷமிட்டபடி தீக்குளிக்க முயன்றார்.


இதைத்தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் குருநாதனை மீட்டு சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது குருநாதன் தரையில் படுத்தபடி தனது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இதனிடையே தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு ஓடி வந்து குருநாதனின் கையில் இருந்த வி‌ஷ பாட்டிலை பிடுங்கி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தாசில்தார் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் வி‌ஷம் குடித்து விட்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story