திருப்பூரில் பரிதாபம்: பனியன் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன்நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி சுகந்தி (வயது 31). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளது. செல்வகுமார் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு துணையாக சுகந்தியும், பனியன் நிறுவனத்தை கவனித்து வந்தார்.
கடந்த சில வாரங்களாக இவர்களின் பனியன் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் செல்வகுமார் மிகுந்த கவலையுடனும், சோர்வுடனும் காணப்பட்டுள்ளார். கணவரை சமாதானப்படுத்தி, அவருக்கு சுகந்தி தைரியமூட்டினார். ஆனால் சுகந்தி தனது கவலையை வெளியில் சொல்லாமல், மனதுக்குள்ளேயே வைத்திருந்தார். இதனால் மனதளவில் அவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுகந்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சுகந்தியின் உடலை பார்த்து செல்வகுமாரும், அவருடைய குழந்தைகளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story