ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக ஜவுளி வியாபாரி கொலையுண்டது அம்பலம்


ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக ஜவுளி வியாபாரி கொலையுண்டது அம்பலம்
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட ஜவுளி வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக மனைவி, மகன், கள்ளக்காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி நேதாஜிநகரை சேர்ந்தவர் மாதேசன்(வயது 45). ஜவுளி வியாபாரியான இவர் தேன்கனிக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் டி-குண்டு அருகே சாலையின் சென்டர் மீடியனில் கடந்த 27-ந் தேதி இரவு மாதேசன் இறந்து கிடந்தார்.

அவர் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் போலீசார் அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டுவந்து வீசிசென்றார்களா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாதேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வந்திருந்த மாதேசனின் மனைவி ரேவதி போலீசாரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டுள்ளார். இதனால் ரேவதி மீது சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ரேவதியையும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதியின் மூத்த மகன் யோகேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தந்தை மாதேசனின் பிரேத பரிசோதனை சான்றை தரும்படி கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் எதற்காக உனக்கு தேவைப்படுகிறது, என கேட்டுள்ளார். அதற்கு யோகேஷ், தன் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அந்த பணத்தை அலுவலகத்தில் இருந்து பெற தேவைப்படுகிறது என்றுள்ளார்.

இந்த பதிலால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்படவே, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பெரியாம்பட்டியில் இருந்த ரேவதி மற்றும் அவர் மகன் யோகேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த மாதேசனின் இளைய மகன், என் தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசாரிடம் கூறியுள்ளான். இதனால் ரேவதி மற்றும் அவரது மூத்த மகன் யோகேஷ் ஆகியோரிடம் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் முன்னிலையில் ‘கிடுக்குப்பிடி’ விசாரணையை போலீசார் தொடங்கினர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையின்போது ரேவதி கொடுத்த தகவல்கள் விவரம் வருமாறு:-

எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதே சமயம் உடல் நலமின்றியும் இருந்தார். அதனால் அவர் விரைவில் இறந்துவிட வாய்ப்புள்ளதாக கருதி அரசு இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 பாலிசிகளை ரூ.10 லட்சத்திற்கும், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ.45 லட்சம் மதிப்பில் ஒரு பாலிசியும் கணவர் மாதேசன் பெயரில் எடுத்து, என்னை அவருக்கு வாரிசாக நியமித்துக்கொண்டேன்.

இதற்கிடையில் எனக்கும், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எங்களது கள்ளக்காதல் எனது கணவருக்கு தெரிந்துவிட்டதால் என்னை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்தார். அதனால் ஜெயபிரகாஷ், அவரது தம்பி வெங்கடேசன், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதுகுறித்து என் மூத்த மகன் யோகேசுக்கும் தெரியும்.

கடந்த மாதம் 27-ந் தேதி தேன்கனிக்கோட்டை கடையிலிருந்து வீட்டிற்கு வந்த எனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்்து ஜெயபிரகாசுக்கு போன் செய்தேன். பிறகு தர்மபுரியில் எனக்கு தெரிந்த நண்பரின் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பின்னர் எனது கணவர் வீட்டில் தூங்கும்வரை காத்திருந்து, ஜெயபிரகாஷ் மற்றும் அவர் தம்பி வெங்கடேசன், இவரின் நண்பர் விக்னேஷ் ஆகியோர் துணையுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்றோம்.

பிறகு உடலை காரில் எடுத்துகொண்டு காரிமங்கலம் அடுத்த டி- குண்டு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் வீசிவிட்டு மீண்டும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டோம். ஆனால் என் மகன் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டதால் போலீசார் எங்களை சந்தேகப்பட்டு பிடித்துவிட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை கொலை செய்து விட்டேன். இவ்வாறு விசாரணையின்போது ரேவதி கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரேவதி கொடுத்த தகவலின் பேரில் அவரது கள்ளக்காதலன் ஜெய பிரகாஷ், இவரது தம்பி வெங்கடேசன் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேவதி மற்றும் அவரது மகனிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்்கில் வாடகைக்கு கார் கொடுத்த நபர், இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க உதவிய முகவர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story