மலைப்பகுதி மக்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்தில் அடிப்படை வசதிகள்
மலைப்பகுதி மக்களுக்காக ரூ.1 கோடியே 40 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியை சேர்ந்த பெத்தேல்புரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார்.
அதையடுத்து கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம், அம்மா திட்ட முகாம் போன்றவை மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காகவே நடத்தப்படுகின்றன. தும்மலாமரத்துப்பட்டி, சிறுவாட்டுக்காடு பகுதியில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்பட்டது. எனவே அந்த கிராமங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் பரப்பலாறு அணையை தூர்வார மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து தனிநபர் கழிப்பறையின் அவசியம் குறித்து சப்-கலெக்டர் அருண்ராஜ் பேசினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் தும்மலாமரத்துப்பட்டி, சிறுவாட்டுக்காடு பகுதிக்கு சென்ற கலெக்டர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story