பழனியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது
பழனியில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
பழனி,
பழனியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட துணை தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். பழனி நகர தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் பொன்.செல்லமுத்து உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மையத்தின் நோக்கம் குறித்தும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவர் பேசினார். அதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
பழனியில் பா.ஜ.க. சார்பில் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள், குறைகளை பா.ஜ.க. தொண்டர்களிடம் தெரிவிக்கலாம். பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண பா.ஜ.க. தொண்டர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது. இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவுமே சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வைகோ மற்றும் பிற கட்சியினர் இந்து இயக்கத்தினரை அச்சப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். கமல்ஹாசன் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையதளம் மூலம் தனது கட்சியில் சேர விருப்பம் தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார். மிகப்பெரிய கட்சியை சேர்ந்தவர்கள் கமல்ஹாசனின் கட்சியில் சேர தெரிவிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி:- தமிழக பட்ஜெட் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பதில்:- பட்ஜெட்டை பொறுத்தவரை மாநில அரசுக்கு தெளிவான குறிக்கோள் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு பதிலாக மக்களை கவரும் வகையில் கவர்ச்சி திட்டங்கள் தான் உள்ளது.
கேள்வி:- ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க விருப்பமா?
பதில்:- இன்னும் கட்சியே தொடங்கவில்லை. கட்சியை தொடங்கிய பின்பு தான் தனது கருத்தை சொல்வேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். எனவே அவர் கட்சி தொடங்கட்டும். அதன் பின்னர் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.
6 வாரங்கள் அவகாசம்
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பா.ஜ.க. காலதாமதம் செய்கிறது என கூறி சட்டசபைக்கு தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனரே?
பதில்:- காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு 6 வார கால அவகாசம் அளித்துள்ளது. அதன் பின்னர் இந்த பிரச்சினை குறித்து பா.ஜ.க. இறுதி முடிவு எடுக்கும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கைப்பற்றுவது கடினமே.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story