ஆத்தூர் பகுதியில் பாறைகளை ஆய்வு செய்த வெளிநாட்டு குழுவினரால் பரபரப்பு
ஆத்தூர் பகுதியில் வெளிநாட்டு குழுவினர் பாறைகளை ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் சென்டர் உள்ளது. இதன் நிர்வாகியாக சஜ்ஜியு கிருஷ்ணா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளார். இவர் தலைமையில் சீன நாட்டை சேர்ந்த 6 பேர் மற்றும் 5 கேரள மாநில மாணவர்கள் ஒரு குழுவாக நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு வந்தனர்.
வெளிநாட்டினர் இடம் பெற்றிருந்த இந்த குழுவினர் ஆத்தூர் முல்லைவாடி வசிஷ்ட நதி பகுதியில் உள்ள பாறைகளை சிறிய அளவில் உடைத்து ஆய்வு செய்தனர். இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அந்த குழுவினர் குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த குழுவினரை பொதுமக்கள் ஆத்தூர் நகரசபை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அந்த குழுவினரிடம் விசாரணை மேற்கொண்ட நகரசபை ஆணையாளர் கண்ணன் ஆவணங்களை வாங்கி பார்த்தார். பின்னர் இதுகுறித்து மேல் விசாரணைக்கு ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அந்த குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு நடந்த விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த குழுவினர் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதும், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன்மலை, பச்சமலை பகுதிகளில் இதுகுறித்து ஆய்வு செய்துவிட்டு ஆத்தூர் பகுதிக்கு ஆய்வுக்கு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெற்று ஆய்வுசெய்ய வேண்டும் எனக்கூறி அந்த குழுவினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆத்தூரில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story