எடப்பாடி அருகே ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்து விட்டு விவசாயியிடம் பணத்தை அபேஸ் செய்ய முயன்ற 2 பேர் சிக்கினர்
எடப்பாடி அருகே சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து விட்டு, விவசாயியிடம் பணத்தை அபேஸ் செய்ய முயன்ற 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி,
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த போடிநாயக்கன்பட்டி மல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 54), விவசாயி. நேற்று காலை 11 மணியளவில் இவர் எடப்பாடி-சேலம் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ரூ.57 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்து, அதை தனது மொபட்டின் முன்புறமுள்ள கொக்கியில் மாட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார். நாச்சியூரில் இருந்து போடிநாயக்கன்பட்டி ரோட்டில் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ‘சாலையில் பணத்தை கீழே போட்டு விட்டு செல்கிறீர்கள்‘ என்று அவரிடம் சத்தம் போட்டு கூறினார்கள். உடனே துரைசாமி மொபட்டை நிறுத்திவிட்டு கீழே சிதறி கிடந்த பணத்தை எடுக்க சென்றார்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் பின்னால் இருந்தவர் மொபட்டில் இருந்த பணப்பையை எடுக்க முயன்றார். உடனே துரைசாமி சுதாரித்துக்கொண்டு மொபட் நிறுத்தி இருந்த இடத்திற்கு ஓடிவந்து அந்த நபரை கட்டி பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த சாலையில் வந்தவர்கள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.
மற்றொரு வாலிபர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அருகில் இருந்த சோளக்காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினார். இதனிடையே தகவல் கிடைத்ததும், எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சோளக்காட்டுக்குள் தப்பிச்சென்ற வாலிபரை விரட்டிச்சென்று பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து விட்டு விவசாயியிடம் பணத்தை அபேஸ் செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் அவர்கள், திருச்சி துவாக்குடியை சேர்ந்த பிரேம்குமார்(வயது 28), ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த பலராமன்(40) என்பது தெரியவந்தது. பிடிபட்ட இருவரும் இதேபோன்று திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story