ஓடும் பஸ்சில் காதல் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, கோவை கோர்ட்டு தீர்ப்பு


ஓடும் பஸ்சில் காதல் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2018 4:45 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் காதல் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார் (வயது 21). தொழிலாளி. இவருடைய தங்கையும், வெள்ளிகுப்பம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தி (19) என்பவரும் தோழிகள். இதனால் ஆனந்தி, அடிக்கடி உதயகுமார் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது உதயகுமாருக்கும், ஆனந்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியது.

இது அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் இருவரும் கடந்த 13.10.2016 அன்று பண்ணாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஈரோடு சென்று அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தினார்கள். பிறகு சொந்த ஊருக்கு வந்தனர்.

உதயகுமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது காதல் மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் அவர் அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். மேலும் ஆனந்தி, உதயகுமார் கட்டிய தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு பெற்றோருடன் சென்று விட்டார். பிறகு அவர் கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இதை அறிந்த உதயகுமார் அங்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதனர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார், ஆனந்தியை பிடித்து தள்ளினார். இதில் அங்கிருந்த சுவர் மீது அவருடைய தலை மோதியதில் காயம் அடைந்தார். அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கடந்த 15.5.2017 அன்று ஆனந்திக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக தனது தாயார் கமலவேணியுடன் சிறுமுகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். இதை அறிந்த உதயகுமார், தனது மனைவியை பின்தொடர்ந்து வந்து அந்த பஸ்சில் ஏறிக்கொண்டார்.

அவர்கள் சென்ற பஸ் மேட்டுப்பாளையம் பவர்ஹவுஸ் அருகே வந்தபோது திடீரென்று உதயகுமார் எழுந்து, தனது மனைவி இருந்த இருக்கை அருகே சென்றார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதல் மனைவி என்றும் பாராமல் அவருடைய மார்பு பகுதியில் குத்தினார். இதை பார்த்ததும் சக பயணிகள் அலறினார்கள். அலறல் சத்தம் கேட்டதும் டிரைவர் பஸ்சை நிறுத்தியதால், உதயகுமார் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story