சேலம் அருகே பரிதாபம் பஸ்- சரக்கு வாகனம் மோதல்; வியாபாரி உள்பட 3 பேர் பலி


சேலம் அருகே பரிதாபம் பஸ்- சரக்கு வாகனம் மோதல்; வியாபாரி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே பஸ்- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் பன்றி மற்றும் உயர்ரக நாய்களை விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு உயர் ரக நாய்களை வாங்குவதற்காக தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஆத்தூருக்கு புறப்பட்டார். அந்த வாகனத்தை சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (26) என்பவர் ஓட்டிச்சென்றார்.

பின்னர் அவர்கள் 3 உயர் ரக நாய்களை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நள்ளிரவு மீண்டும் சேலத்துக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் சரக்கு வாகனம் சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு ஜீப்பை, சரக்கு வாகனம் முந்தி சென்றது. அந்த நேரத்தில் எதிரே எர்ணாகுளத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் எதிரே வந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. மேலும் பின்னால் வந்த ஜீப், சரக்கு வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த கணேசன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ் டிரைவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மணிமாறன் (36) என்பவர் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு, பாலத்தில் மேல் இருந்து கீழே உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திகேயனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது பற்றி தகவல் அறிந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமாறன், கார்த்திகேயன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் ஜீப்பில் வந்த ஈரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் (34), தமிழ்செல்வன் (43) ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினார்கள். இவர்கள் கடலூரில் இருந்து ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 20 பேர் காயமின்றி தப்பினார்கள்.

விபத்தில் பலியான கணேசனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் வாங்கி வந்த 3 உயர் ரக நாய்களில் 2 நாய்கள், விபத்து ஏற்பட்டதும் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டது. மற்றொரு நாய் சரக்கு வாகனத்தில் சிக்கிக்கொண்டது. அதனை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக காரிப்பட்டி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காரிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story