மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சேலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மைய துறை அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்றும், தேர்வு அறை கண்காணிப்பாளர்களை 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்றும், விடைத்தாள் திருத்தும் மையத்தில் அட்டவணை நியமிக்கும்போது சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் சேலம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் முறையிட்டனர்.
ஆனால், 10-ம் வகுப்பு தேர்வு மையத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரியதுபோல நியமனம் செய்யாமல் குளறுபடி நடந்துள்ளதாக கூறி நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் சேலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.
அதன் பின்னர், சேலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், மாவட்ட தலைவர் அருணாசலம் உள்பட பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story