கொள்கைகள், திட்டங்களை வெளியிட்ட பிறகுதான் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மக்கள் ஏற்பார்களா என்பது தெரியும் நடிகர் பிரபு பேட்டி
கொள்கை, திட்டங்களை வெளியிட்டபிறகுதான் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மக்கள் ஏற்பார்களா என்பது தெரியவரும் என்று நடிகர் பிரபு கூறினார்.
திருவண்ணாமலை,
வேலூர், திருவண்ணாமலையில் நேற்று கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நான் வருடத்திற்கு 2 அல்லது 3 முறை வருவேன். திருவண்ணாமலை மாவட்ட மக்கள் என் மீதும், எனது தந்தை (நடிகர் சிவாஜி) மீதும் உள்ள பாசத்தினால் எப்போதும் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள். தற்போது நான் திருவண்ணாமலைக்கு வந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. அதனை நான் வரவேற்கிறேன். அவர்களுக்காக நான் அவர்களது தொகுதிக்கு நேரில் சென்று பிரசாரம் செய்வேன். இவர்கள் இருவரும் எனது இரு கண்கள் போன்றவர்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். கலைஞர், எம்.ஜி.ஆர்., எனது தந்தை போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் பிரியாதது.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தங்கள் அரசியல் கொள்கைகள், திட்டங்களை வெளியிட்ட பிறகுதான் அவர்களை மக்கள் ஏற்பார்களா? என்று தெரியும். அவர்களது கொள்கை மற்றும் திட்டங்களை அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
நடிகர் சங்கம் தற்போது நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் இன்னும் சிறப்பாக செயல்படும். நான் தற்போது சார்லிசாப்ளின்-2, சாமி-2 படங்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் எனது பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கிறேன்.
அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் சமமாக பார்க்கிறேன். தேர்தல்நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் இருவருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்வேன். அவர்கள் இருவரும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமானவர்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது பாரம்பரியமானதுதான். இதில் ஒன்றும் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story