திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 32,908 பேர் எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 32 ஆயிரத்து 908 பேர் எழுதினர். 318 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பொது தேர்விற்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 895 மாணவர்களும், 10 ஆயிரத்து 299 மாணவிகளும் என 21 ஆயிரத்து 194 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 869 மாணவர்களும், 6 ஆயிரத்து 163 மாணவிகளும் என 12 ஆயிரத்து 32 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 226 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல் தனித்தேர்வர்கள் 692 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வுக்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 304 பள்ளிகளுக்கு 79 தேர்வு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 191 பள்ளிகளுக்கு 44 தேர்வு மையங்களும் என மொத்தம் 495 பள்ளிகளுக்கு 123 தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் தனித் தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு 8.30 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். மேலும் அவர்கள் வரும் வழியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். தேர்வு மையங்களுக்கு வந்த அவர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்பு வரை தொடர்ந்து படித்து கொண்டே இருந்தனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்து ஆசிரியைகள் மாணவிகளுக்கு ஆசிர்வாதம் செய்தனர்.
தேர்வு மையங்களை கண்காணிக்க 1,825 அறை கண்காணிப்பாளர்களும், 130 முதன்மை கண்காணிப்பாளர்களும், 130 துணை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 180 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வில் ஏதேனும் மாணவ, மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனரா? என்று பார்வையிட்டு சோதனை செய்தனர்.
இதில் 32 ஆயிரத்து 908 பேர் தேர்வு எழுதினர். 318 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 649 பேர் தேர்வு எழுதினர் 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களும் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
செய்யாறு கல்வி மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் வி.ராஜசேகரன் (பொறுப்பு) திருவோத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, விஸ்டம் மெட்ரிக் பள்ளி, விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி, இந்தோ-அமெரிக்கன் பள்ளி, செய்யாறு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story