8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் 50 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன


8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் 50 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 50 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

விழுப்புரம், 

தியேட்டர்களில் சினிமா படங்களை ‘கியூப் டிஜிட்டல்’ முறைப்படி திரையிட அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடுவதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் கடந்த 2 வாரங்களாக புதுப்படங்கள் திரையிடப்படாமல் ஏற்கனவே திரையிடப்பட்ட படங்களே ஓடின. இதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைந்ததால் பெரும்பாலான தியேட்டர்களில் 4 காட்சிகளுக்கு பதிலாக 2 காட்சிகள் மட்டுமே ஓடின.

இந்த நிலையில் 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், இருக்கைகள் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், தியேட்டர்கள் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகரில் உள்ள 6 சினிமா தியேட்டர்களும் நேற்று முதல் மூடப்பட்டன. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 44 சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன.

Next Story