மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு,
பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அ.தி.மு.க., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று அறிவிக்க வேண்டும்.
இந்த நிலையில் தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாடு வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பெருந்துறை அருகே உள்ள சரளையில் நடக்கிறது. மாநாட்டு அரங்கை பார்வையிட வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், இளைஞர்கள் திராவிட இயக்க வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் திராவிட இயக்க வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டு அரங்கில் கூடி இருந்த மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
ஈரோடு மண்டல மாநாடு ஒரு மண்டல மாநாடாக இல்லாமல் மாநில மாநாடு போன்ற பிரமாண்டத்துடன் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் சிறப்பு அரங்காக திராவிட இயக்க வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் வரலாறு மட்டுமின்றி நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்றவை எப்படி தோற்றுவிக்கப்பட்டன?. ஏன்? எதற்காக? என்று மாணவ-மாணவிகள், இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சியில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., தி.க., நீதிக்கட்சி ஆகியவை இந்த நாட்டுக்கும், இனத்துக்கும், சமுதாயத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட வரலாறுகள் விளக்கப்பட்டு உள்ளன.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக அவரது கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளை பதவி விலக வைத்தார். அதுமட்டுன்றி இனிமேல் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து இருக்கிறார். ஆனால் இந்த உணர்வு தமிழகத்தில் இருக்கும் ஈ.பி.எஸ். (எடப்பாடி பழனிசாமி), ஓ.பி.எஸ். (ஓ.பன்னீர்செல்வம்) ஆகியோருக்கு இல்லை. மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. நீட் பிரச்சினையில் மாணவ-மாணவிகளுக்கு எதிராக உள்ளது. இவற்றைப்பற்றி தட்டிக்கேட்க வக்கற்ற, லாயக்கில்லாத அரசாக இந்த அரசு உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. சேது சமுத்திர திட்டம் என்பது அண்ணாவின் கனவு, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கனவு. தி.மு.க.வின் உணர்வுடன் கலந்தது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் திட்டமாக அமையும். எனவே நிறைவேற்ற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வோம் என்று நான் கூறியது எங்களை யாரும் பாராட்ட வேண்டும் என்றல்ல. விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதற்காகத்தான். இந்த வாய்ப்பினை தமிழக அரசு பயன்படுத்தி செயல்பட்டால், அதை தொடர்ந்து தி.மு.க.வும் பின்பற்றும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருப்பது என்பது ஏமாற்று வேலை. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் பலமுறை அறிவித்தும் நடைபெறவில்லை. எனவே தற்போதைய அறிவிப்பு குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழக அரசின் ஒட்டு மொத்த செயல்பாடு என்பது கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் (கையூட்டு, வசூல், ஊழல்) என்று மட்டுமே உள்ளது.
பேட்டியின் போது ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, தி.மு.க. துணைப்பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் (வடக்கு) என்.நல்லசிவம், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா, செல்வகணபதி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், க.சின்னையன், முக்கிய நிர்வாகிகள் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், பிரகாஷ், திருநாவுக்கரசு, கோட்டை ராமு, பொ.ராமச்சந்திரன், காஞ்சி குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story