கடலூர் பகுதியில் பரவலாக மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


கடலூர் பகுதியில் பரவலாக மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர், 

வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி 10-ந் தேதியுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் பின்னர் இரவில் பனியும், பகலில் வெயிலுமாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை.

ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதை உணர முடிகிறது. இதனால் பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், தலையில் தொப்பி அணிந்தும் சென்றதை பார்க்க முடிந்தது. சுட்டெரித்த வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் கரும்புச்சாறு, இளநீர், நீர்-மோர், பழச்சாறு ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை சாப்பிட்டும் தாகத்தை தணித்துகொண்டனர்.

பகல் நேரமட்டுமின்றி இரவு நேரத்திலும் புழுக்கம் ஏற்பட்டு பலரது தூக்கத்தையும் கலைத்தது. அதோடு கொசுத்தொல்லையும் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் மழை பெய்தால்தான் வெப்பத்தின் தாக்கம் தணியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு லேசான மழை பெய்தது. என்றாலும் வெயிலின் தாக்கம் தணிந்தபாடு இல்லை. பின்னர் நேற்று அதிகாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காலை 6 மணிக்கு லேசான சாரலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் சூடுபிடித்தது. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றதை காணமுடிந்தது.

சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 26 மில்லி மீட்டர், வானமாதேவி-23.80 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை9 மில்லி மீட்டர், பண்ருட்டி-4, புவனகிரி-2 மில்லி மீட்டர் மழைபதிவானது. சராசரியாக 3.09 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Next Story