திருவண்ணாமலையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டிடப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அண்ணா நகர் பகுதியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும், தாமரை நகர் 6-வது தெருவில் ரூ.56 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு வரும் பூங்காக்களை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் அடிஅண்ணாமலை ஊராட்சியில் ஸ்ரீனிவாசா பள்ளி அருகில் தாய் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள அம்மா பார்க், அம்மா உடற்பயிற்சி கூடத்திற்கான இடத்தினை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர், ஊராட்சித்துறை மூலமாக கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் இலவச கழிவறையை ஆய்வு செய்தார். மேலும், அடிஅண்ணாமலை கிராமத்தில் தனி நபர் இல்லக் கழிவறை திட்டத்தின் கீழ் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக ரூ.12 ஆயிரம் மானியத்தில் 2017-18-ம் நிதி ஆண்டில் 13 வீடுகளில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புருஷோத்தமன், கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story