குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

கெண்டையன்பட்டி, குளக்கரைப்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள துவார் ஊராட்சியில் கெண்டையன்பட்டி, குளக்கரைப்பட்டி, குளவாய்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 10 சிறுமின்விசை தொட்டி உள்ளன. கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சிறுமின்விசை தொட்டிகள் மின்மோட்டார் பழுது மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக அடுத்தடுத்து செயல் இழந்தன.

 இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் தேவைக்காக வயல்களுக்கு பாய்ச்சும் தண்ணீர் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிகுடங்களுடன் புதுக்கோட்டை–கறம்பக்குடி சாலையில் கெண்டையன்பட்டி மற்றும் குளக்கரைப்பட்டி ஆகிய 2 இடங்களில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் மற்றும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்திற்கு அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளையும் செயல்பட செய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story