பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை


பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 18 March 2018 3:45 AM IST (Updated: 18 March 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு நீதிபதி லியாகத்அலி நேற்று தீர்ப்பு கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கார்ணம்பட்டியை சேர்ந்தவர்கள் சின்னதம்பி (வயது 67). இவரது மனைவி முத்துலெட்சுமி(50), இவர்களுக்கு முத்துகிருஷ்ணன் (32) என்ற மகனும், லெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் இதில் முத்துகிருஷ்ணனுக்கு கடந்த 2014–ம் ஆண்டு இலுப்பூரை சேர்ந்த ஷீலாராணி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்திற்கு பிறகு ஷீலாராணியிடம், முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், அவரை அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் மனமுடைந்த ஷீலாராணி கடந்த 6.1.2016–ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (வி‌ஷம்) சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷீலாராணியின் கணவர் முத்துகிருஷ்ணன், மாமனார் சின்னதம்பி, மாமியார் முத்துலெட்சுமி, நாத்தனார் லெட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத்அலி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது ஷீலாராணியிடம், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி, அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த கணவர் முத்துகிருஷ்ணன், மாமனார் சின்னத்தம்பி, மாமியார் முத்துலெட்சுமி, நாத்தனார் லெட்சுமி ஆகிய 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அங்கவி ஆஜராகி வாதாடினார்.

Next Story