பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து லாபம் அடையும் வழிமுறையை அறிந்து தொழில்துறையினர் செயல்பட வேண்டும் சத்தியபாமா எம்.பி. பேச்சு
பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து லாபம் அடையும் வழிமுறையை அறிந்து தொழில்துறையினர் செயல்பட வேண்டும் என சத்தியபாமா எம்.பி. பேசினார்.
திருப்பூர்,
ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சுழலை பாதுகாப்பது போன்றவற்றை விளக்கும் கருத்தரங்கம் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்றுகாலை நடைபெற்றது. இதற்கு திருப்பூர் சாய ஆலைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார். டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி உதவி இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்து இந்த திட்டம் குறித்து பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக சத்தியபாமா எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு பின்னலாடை தொழிலை வளர்ச்சியடைய செய்துள்ளார்கள். தொழிலாளர்களாக இருந்த பலரை முதலாளிகளாக இந்த தொழில் மாற்றியுள்ளது. தொழில்துறையினர் ஆடை தயாரிப்பில் ஈடுபடும் போது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதனால் தொழில் பாதித்து பலர் நஷ்டத்தில் சிக்கியுள்ளனர். எனவே பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து லாபம் அடையும் வழிமுறையை அறிந்து தொழில்துறையினர் செயல்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து தொழில் மேலும் முன்னேற்றமடைய வேண்டும். தொழில்துறையினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளையும் நட வேண்டும்.” என்றார் மேலும், இதில் ஜவுளித்துறையை சேர்ந்த வாசு, இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதன் பின்னர் சாய ஆலைகளில் வேலை செய்யும் சில பயனாளிகளுக்கு சுத்தத்தை பேணும் வகையில், சோப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது. இதனை சத்தியபாமா எம்.பி. வழங்கினார். இந்த கருத்தரங்கில் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மூலப்பொருளாக மாற்றுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Related Tags :
Next Story