உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் கிடந்தவர் சமூக ஆர்வலர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் காயங்களுடன் பிணமாக கிடந்தவர் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வனராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தளி,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அந்த உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மர்ம ஆசாமிகள் அந்த நபரை கடத்தி வந்து கொலை செய்து உடலை அணையில் வீசிச்சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனவே கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக தளி, உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யாராவது காணாமல் போனார்களா? இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் ஏதும் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து தளி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, பிணமாக கிடந்தவரின் அங்க அடையாளங்கள் குறித்த தகவலை திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் போலீஸ் நிலையத்திற்கு தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த மேரி(வயது 50) என்பவர் தனது கணவர் வனராஜ்(58) காணாமல் போனது குறித்து புகார் அளிக்க வந்தார்.
அப்போது திருமூர்த்தி அணையில் பிணமாக கிடந்தவரின், அங்க அடையாளங்கள், அவர் அணிந்து இருந்த வேட்டி, சட்டை ஆகியவற்றை மேரியிடம் போலீசார் காண்பித்தனர். அவற்றை பார்த்து விட்டு, திருமூர்த்தி அணையில் பிணமாக கரை ஒதுங்கியவர் தனது கணவர் வனராஜ்தான் என்று மேரி கூறினார். மேலும் உடலையும் அடையாளம் காட்டினார். இதையடுத்து கொலை செய்யப்பட்டவர் வனராஜ் என்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட வனராஜிக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வனராஜிக்கு நிரந்தரமான தொழில் எதுவும் இல்லாததால் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். சமூக ஆர்வலரான வனராஜ் சமூக பிரச்சினைகளை கையில் எடுத்தும், வனப்பகுதியில் அத்துமீறி வீடு கட்டுதல் போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தி வந்ததோடு, வனப்பகுதியில் நடக்கும் அத்துமீறல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம ஆசாமிகள் சமூக ஆர்வலர் வனராஜை கடத்தி வந்து கொலை செய்து அவருடைய உடலை அணையில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனவே கொலையாளிகளை பிடித்தால்தான் கொலைக்கான முழுவிபரம் தெரியவரும். எனவே கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின் பேரில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவி, சிவக்குமார் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜகணேஷ், ரவி உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் வனராஜை கொலை செய்த மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story