திருப்பூரில், தொழிலாளர்கள் நலன் கருதி இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூரில் தொழிலாளர்களின் நலன் கருதி இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய மஸ்தூர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்,
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் மகளிர் மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2-வது நாளான நேற்று வாலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் சரவணபவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார். அகில பாரத துணைத்தலைவர் லக்ஷமா ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். மாநில பொதுச்செயலாளர் முருகேசன் அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில், திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 100 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனை திருப்பூரில் இ.எஸ்.ஐ. மூலமாக கட்டப்படும் என்று பல வருடங்களுக்கு முன்பு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த ஆஸ்பத்திரி கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதனால் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக இந்த மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருப்பூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். நெசவு தொழில் நலிவடையாமல் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story