அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: எங்களுக்கு கட்சியின் நடவடிக்கையை விமர்சனம் செய்வதற்கு உரிமை இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
எங்களுக்கு கட்சியின் நடவடிக்கையை விமர்சனம் செய்வதற்கு உரிமை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70–வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் மதுரை பாண்டிகோவில் பகுதியில் இலவச திருமணம் நிகழ்ச்சி வருகிற 30–ந் தேதி நடக்கிறது. இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள். இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–
முதலில் 70 ஜோடிகளுக்கு திருமணம் விழா நடத்த இருந்தோம். தற்போது ஏழை எளிய குடும்பங்கள் அதிகமாக வந்துள்ளதால் 100 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறோம். இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் பேரவை நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். திருமண விழாவிற்கு வருகை தரும் முதல்–அமைச்சரை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை 50 ஆயிரம் சீருடை அணிந்த பேரவை நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.
இது தவிர 1000 கலைஞர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள், விருந்து என பல்வேறு ஏற்பாடுகளை செய்து உள்ளோம். திருமண ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், வெள்ளி குங்குமச்சிமிழ், ஆடைகள், வெங்கல குத்துவிளக்கு, கட்டில், பீரோ என 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்க உள்ளோம். விழாவில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கே.சி.பழனிச்சாமியை நீக்குவதும் சேர்ப்பதும் தலைமையின் நடவடிக்கை. அதை விலக்கி செல்வதற்கும், விமர்சனம் செய்வதற்கும் எங்களுக்கு தகுதியில்லை. தேர்தல் ஆணையம் உண்மையான அ.தி.மு.க எது என்பதை சொல்லி இருக்கிறார்கள். ஆகவே இன்றைக்கு ஒன்று பட்ட அ.தி.மு.க. நாங்கள் தான் என்பதை, அவர்கள் தனி இயக்கம் கண்டதில் இருந்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
கட்சியை ஆரம்பிக்க ஒவ்வொரும் சொல்கிற தாரக மந்திரம் நாங்கள் ஆட்சியை பிடித்து விடுவோம் என்பது தான். ஏன் என்றால் அவர்களின் தொண்டர்கள் மற்றும் அவர்களது பின்னால் வருபவர்களை உற்சாகம் படுத்த வேண்டும். அதற்காக அரசியலில் சகஜமாக சொல்கிற வார்த்தை. யார் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கும் நேரிடையாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் உரிமையை காக்க தான் இந்த அரசு இருக்கிறது. என்றைக்கும் தமிழக உரிமையை இந்த அரசு விட்டுக் கொடுக்காது.
இது ஓராண்டு பிரச்சினை அல்ல. 129 ஆண்டு கால பிரச்சினை. அதற்கு இன்றைக்கு நிரந்தரமான தீர்ப்பை பெற்றுள்ளது அ.தி.மு.க. அரசு. அதில் காவிரி நிதி நீர் ஒரு மாநிலத்திற்கு சொந்தமானது அல்ல. அது பொது சொத்து என்ற வரலாற்று தீர்ப்பையும் என்பதையும் இந்த அரசு தான் பெற்றுத் தந்துள்ளது. இனி 15 ஆண்டுகளுக்கு வழக்கு தொடர முடியாது. நமது உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம். மத்திய அரசின் கடமையை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.