பட்ஜெட் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கு
தமிழக பட்ஜெட் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
சிவகாசியில் கம்மவார் சங்கம் சார்பில் நடந்த யுகாதி திருவிழாவில் கலந்து கொள்ள வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய பா.ஜனதா ஆட்சி மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முடிவெடுப்பார்கள்.
உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் இருந்து வரும் நிலையிலும், தமிழக அரசு மிகச்சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கல்வித்தொகைக்கு இது வரை இல்லாத வகையில் ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போதே கடந்த ஆறு வருடங்களாக கல்லித்தொகைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் தான் தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 46.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் அதிக நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய செயலியின் செயல்பாடு குறித்து தொழில்நுட்ப அதிகாரிகளுடன் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.
தமிழக பட்ஜெட் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு கமல்ஹாசனுக்கு போதிய அரசியல் ஞானம் இல்லை. அதனால் தான் அவர் கடன் சுமை பற்றி பேசியுள்ளார். தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதற்கான காரணம் பற்றி அவரே தெரிவித்து விட்டார். இதில் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்.