புதுப்பேட்டையில் மூதாட்டி கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

புதுப்பேட்டையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (வயது 82). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சின்னப்பொண்ணு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் தன்னிடம் இருந்த பணத்தை சிலருக்கு வட்டிக்கு விட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி காலையில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணியால் திணிக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு, சின்னப்பொண்ணு கழுத்து, மூக்கு, காதில் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 10 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கொலை மற்றும் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த நாய் மோப்பமிட்டபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. போலீசாரின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து, கொலை மற்றும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். அந்த வகையிலும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை.
மூதாட்டி கொலை வழக்கு சம்பந்தமாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், சின்னப்பொண்ணு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
Related Tags :
Next Story