திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீஸ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் நேற்று வளர்மதி பாலம் பஸ்நிறுத்தம் அருகே வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பாண்டியராஜன் ஆகியோர் அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கட்டாய தலைகவசம் அணிய வேண்டும் என்ற சட்டதிட்டங்களை எடுத்து கூறி ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்கள்.
இதுபோல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. அதில் வாகன ஓட்டுவது குறித்து பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டு இருந்தன.
மேலும் வாகனம் ஓட்டும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story