மின்மாற்றிக்கு இறுதிச்சடங்கு செய்து கிராம மக்கள் நூதன போராட்டம்


மின்மாற்றிக்கு இறுதிச்சடங்கு செய்து கிராம மக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாட்டுக்கு கொண்டுவர காலதாமதம் செய்வதை கண்டித்து மின்மாற்றிக்கு இறுதிச்சடங்கு செய்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகராட்சியின் தாய் கிராமமாக உள்ளது, செவலூர் பகுதி. அதிகளவு குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை தீர்க்க கூடுதல் மின்மாற்றியாவது அமைத்து தர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து புதிய மின்மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. செவலூர் பிரிவு சாலையில் இருந்து புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டு மின் கம்பிகளும் பொருத்தப்பட்டு மின்மாற்றி அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றன. மாதங்கள் பல கடந்தும் இந்த மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.


இது தொடர்பாக கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போதெல்லாம், இன்று, நாளை என்று தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகின்றனர். கோடைகாலம் தொடங்கி விட்டதால் அதிக அளவில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது என கருதிய கிராம மக்கள், இந்த மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி அதற்கு இறுதிச்சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மின்மாற்றி பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மாலை அணிவித்து, ஊதுபத்தி ஏற்றி இறுதி சடங்கு செய்தனர். மேலும் மின்மாற்றியில் கருப்பு துணியையும் கட்டினர். இனியும் அதிகாரிகள் மின்மாற்றி அமைத்து தர காலதாமதப்படுத்தினால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story