பேரணாம்பட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பேரணாம்பட்டில் போலீஸ் நிலையம் அருகிலேயே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் அருகில் பழமையான வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
தற்போது இந்த கோவிலில் மண்டப கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜைகள் முடித்த பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.
நேற்று காலையில் கோவிலை திறப்பதற்கு அர்ச்சகர் சவும்ய நாராயணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் வந்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் பின்பக்க வழியாக நுழைந்து அங்குள்ள இரும்பு கம்பியிலான கேட்டை வளைத்து அங்கு இருந்து பித்தளை குடத்திலான உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையம் அருகிலேயே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story