மயிலத்தில் செல்போன் கடை உரிமையாளர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மயிலத்தில் செல்போன் கடை உரிமையாளர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 19 March 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

தங்ககாசுகளை தருவதாக கூறி மயிலத்தில் செல்போன் கடை உரிமையாளர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலம்,

சென்னை சிந்தாதரிபேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 35). இவருடைய நண்பர் விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபு(34). இவர்கள் 2 பேரும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் தனித்தனியாக செல்போன் கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜானகிராமன் கடைக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்து, தனது பெயர் செந்தில் என்றும், தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த வாலிபர், அவரிடம் தனக்கு கடையில் வேலை தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தற்போது ஆட்கள் இருக்கிறார்கள் என்று ஜானகிராமன் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் ஜானகிராமனின் செல்போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

பின்னர், 2 மாத இடைவெளியில் ஜானகிராமனுக்கு அந்த வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கடையில் வேலை இருக்கிறதா? என அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு அவர் வேலை இல்லை என்று சொல்லி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஜானகி ராமனை தொடர்பு கொண்ட அந்த வாலிபர், தனக்கு தெரிந்தவர்கள் குறைந்தவிலைக்கு தங்க காசுகள் விற்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஜானகிராமன், தனது நண்பர் பிரபுவிடம் கூறியுள்ளார். குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதால் பேராசைப்பட்ட அவர்கள் 2 பேரும் முதலில் போனில் தொடர்பு கொண்ட அந்த வாலிபரிடம் சோதனைக்காக 2 தங்க காசுகளை கேட்டுள்ளனர்.

உடனே ஜானகிராமனும், பிரபுவும் அந்த வாலிபர் கூறியபடி புதுச்சேரி அருகே உள்ள சேதராப்பட்டு பகுதிக்கு காரில் வந்தனர். அங்கிருந்த 2 பேரிடம் 2 தங்க காசுகளை வாங்கினர். அதை வாங்கி 2 பேரும் சென்னைக்கு கொண்டு சென்று தங்க காசுகளின் தன்மையை சோதனையிட்டனர். அப்போது அந்த தங்க காசுகள் தரம் நன்றாக இருந்தது. இதை உண்மை என்று நம்பிய 2 பேரும் மீண்டும் அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தங்க காசுகள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் அவர்கள் பேரம் பேசி, ரூ.40 லட்சத்திற்கு 2 கிலோ தங்க காசுகள் கேட்டுள்ளனர். இதற்கு அந்த வாலிபர் ஒப்புக்கொண்டார். 2 கிலோ தங்கத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.56 லட்சமாகும்.

அந்த வாலிபர் கூறியபடி, நேற்று முன்தினம் 2 பேரும் காரில் சென்னையில் இருந்து திண்டிவனம் அருகே மயிலத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள திருமண மண்டபம் அருகே காரை நிறுத்தி விட்டு கள்ளக்கொளத்தூர் சாலைக்கு 2 பேரும் பணத்துடன் நடந்து சென்றனர். அப்போது அங்கு புதுச்சேரியில் ஏற்கனவே தங்க காசுகளை வழங்கிய 2 பேர் அங்கு நின்றனர். அவர்களிடம் சென்ற பிரபுவும், ஜானகிராமனும் நாங்கள் பணத்துடன் வந்திருக்கிறோம். தங்க காசு கொடுங்கள் என கேட்டனர்.

உடனே அவர்கள் அங்குள்ள தோப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 குடங்களை எடுத்து வந்து ஜானகிராமனிடம் கொடுத்தனர். அந்த குடங்களை திறந்து பார்த்த போது அதில் தங்க காசுகள் இருந்தன. உடனே அந்த நபர்களிடம் ரூ.40 லட்சத்தை அவர்கள் கொடுத்தனர். அந்த நபர்கள் தங்க காசுகள் இருக்கும் குடத்தை காருக்கு நாங்கள் எடுத்து வருகிறோம் என கூறினர். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். பின்னர் ஜானகிராமன், பிரபு மற்றும் அந்த வாலிபர்கள் 2 பேரும் கார் நிறுத்தி வைத்திருந்த திருமணம் மண்டபத்தை நோக்கி நடந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் கார் ஒன்று வேகமாக வந்து அவர்களின் அருகே நின்றது. அந்த காரில் இருந்து 5 வாலிபர்கள் இறங்கினர். அவர்கள் ஜானகிராமன், பிரபு ஆகிய 2 பேரையும் பார்த்து நீங்கள் யார்? எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என போலீஸ் தோரணையில் கேட்டு மிரட்டினர்.

பின்னர் தங்க காசு மற்றும் பணத்தை வைத்திருந்த வாலிபர்களை காரில் ஏறுமாறு கூறினர். உடனே 2 வாலிபர்களும் காரில் ஏறினர். இதையடுத்து அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஜானகிராமனும், பிரபுவும் தங்களது காரில் அவர்களை பின் தொடர்ந்து சென்று தேடி பார்த்தனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று தலை மறைவாகினர். அதன் பின்னர் தான் ஜானகிராமனுக்கும், பிரபுவுக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இது குறித்து அவர்கள் மயிலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் போலீசார் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க காசுகளை கொடுப்பதாக கூறி பணத்தை ஏமாற்றி வாங்கி சென்ற மர்மநபர்கள் 7 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story