மச்சிக்கொல்லி- புழம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும், ஆதிவாசி மக்கள் மனு


மச்சிக்கொல்லி- புழம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும், ஆதிவாசி மக்கள் மனு
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

மச்சிக்கொல்லி- புழம்பட்டி சாலையை சீரமைத்து தரக்கோரி ஆதிவாசி மக்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதன்படி, கூடலூர் அருகே உள்ள மச்சிக்கொல்லி, புழம்பட்டி கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் சாலையை சீரமைத்து தரக்கோரி புகைப்படத்துடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரை 1½ கிலோ மீட்டர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை முழுவதிலும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடிய வில்லை. அந்த வழியாக வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலை சீரமைப்பட்டது. அதன் பின்னர் குறைந்த தூரமே சாலை சீரமைக்கப்பட்டு, பணி முடிவடைந்தது என்று பலகை பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி, செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து உள்ள னர். மேலும் முதியவர்கள், நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அரசு பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பா.ஜனதா அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் மயில்சாமி மற்றும் அதன் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று நீர் அரசு பஸ்களை கழுவுவதற்கும், பொதுக்கழிப்பிடத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அந்த கிணற்று நீர் மோசமான நிலையில் இருப்பதால், கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, கிணற்று நீரை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story