கைதிகளுக்கு கஞ்சா கடத்த உதவும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி. ஜெயபாரதி பேட்டி
கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கடத்துவதற்கு உதவி செய்யும் சிறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. கே.ஜெயபாரதி கூறினார்.
வேலூர்,
சிறைகளை பொறுத்தவரையில் காவலர்கள்தான் தூண்களாக விளங்குகிறார்கள். தற்போது சிறைகளில் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்காக தற்போது 1,015 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயிற்சி முடித்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருவார்கள். அதன்பிறகு வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்கள் எப்படி வெளியே செல்லலாம் என்றுதான் நினைப்பார்கள். அதனால் அவர்களுடைய மனநிலையை மாற்ற சிறையில் யோகா, தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
சூழ்நிலை காரணமாக குற்றம் செய்துவிட்டு வரும் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி அவர்கள் எந்த மாதிரி சூழ்நிலையில் குற்றம் செய்தார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர்களின் மனஅழுத்தத்தை போக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும். இதன்மூலம் அவர்கள் தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது மனம் திருந்தி செல்வார்கள்.
வேலூர் சிறையில் நன்னடத்தை கைதிகள் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தை மேம்படுத்த அங்கு தண்ணீர் வசதி எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கைதிகளை பார்க்க வருபவர்கள் கஞ்சா, செல்போன்களை கைதிகளுக்கு கொடுக்க கொண்டு வந்தாலோ, அவர்களுக்கு சிறைக்காவலர்கள் யாராவது உதவி செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறையில் உள்ள கைதிகள் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ஆக்சிஜன் வசதியுடன் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதிகளின் உயிரிழப்பு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story