சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோவில் தேர் வெள்ளோட்டம்


சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோவில் தேர் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி ஜெயநகரம் கிராமத்தில் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வரை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

தேர் வெள்ளோட்டம்

இந்த கோவில் தேர் சிதிலமடைந்திருந்ததால் தேர் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தேர் திருப்பணிகள் நடத்தப்பட்டு தற்போது தேர் முழுமையடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க அதிர்வேட்டுகளுடன் தேரின் வெள்ளோட்டம் தொடங்கியது. தேரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்ட தேர் மதியம் 2 மணிக்கு நிலைக்கு வந்தது. வெள்ளோட்டத்தை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வெள்ளோட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சீர் எடுத்து வந்த கிராம மக்கள்

முன்னதாக இப்பகுதி கிராமங்களில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பழம், தேங்காய், பட்டு, மாலை போன்ற பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்று மரியாதை செய்வது வழக்கம். அதே போல பாலசுப்பிரமணியர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு செரியலூர், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மங்கள் இசை, வாணவேடிக்கைகளுடன் கிராமத்தார்கள் ஊர்வலமாக சீர் கொண்டு வந்தனர்.

Next Story